வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், கல்லார் நாகூர் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
கடந்த வாரத்தில் நூற்றுக்கணக்கான விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்பிரியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீன், இறால், நண்டு உள்ளிட்டற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால் இறால், வஞ்சிரம், வாவல், விரால், பால்சுறா ஆகியவை அதிக விலைக்கு விற்பனையாகின்.
இதேபோல் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வார விடுமுறை தினமான இன்று மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அனைத்து விசை படகுகளும் அதிகாலை கரை திரும்பிய நிலையில் பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, பாறை உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்பட்டது. இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிரியர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
பெரிய மற்றும் சிறிய வகை மீன்கள் என காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது. மேலும் விலை குறைவால் தங்களுக்கு தேவையான மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.