ஆஸ்திரேலியா முழுவதும் நடத்தப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் இந்தியர்கள் அதிகளவில் குறிவைக்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக நடைபெற்ற March for Australia போராட்டம், தலைநகர் கான்பெரா, சிட்னி, மெல்போர்ன், கான்பெரா உள்ளிட்ட பெரு நகரங்களைத் திக்குமுக்காட வைத்தது. குறிப்பாக இந்தப் போராட்டம் ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்களைக் குறிவைத்திருப்பது, இந்திய வம்சாவளியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது…
ஆஸ்திரேலியாவில் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி, ஆட்சி கட்டிலில் உள்ளது. இங்கு, வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறி வருகிறார்கள் என்பது வலதுசாரி அமைப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டில் ஒருவர் வெளிநாட்டினராக இருப்பதே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதை முன்வைத்தே ஆஸ்திரேலியா முழுவதும் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டம் வெடித்து வெறுப்புப் புகையைக் கக்கியிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினரை குறிவைக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் வெடித்ததற்கான காரணம், கடந்த 5 ஆண்டுகளில் கிரேக்கர்கள், இத்தாலியர்களை விட இந்தியர்களின் எண்ணிக்கைப் பெருகியுள்ளதுதான் என்று சொல்லப்படுகிறது….ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருப்பதும் , வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரிக்கக் காரணமாக கூறப்படுகிறது.
2021ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள 2 கோடியே 72 லட்சம் பேரில் சுமார் 10 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் என்பது தெரியவந்துள்ளது. ஆங்கிலேயர்கள் முதலிடத்தில் உள்ள நிலையில், அதற்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவாக இந்தியர்கள் மாறியுள்ளனர்.
1800களில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த ஆங்கிலேயர்கள், இந்திய தொழிலாளர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பகால குடியேற்றங்கள் தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1970களில் வெள்ளையர் அல்லாதோர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் இனவெறி வெள்ளையர் ஆஸ்திரேலியா கொள்கை ரத்து செய்யப்பட்டபோது, இந்திய பொறியாளர்கள் அலைஅலையாக ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கின்றனர். 1990களில் ஐ.டி ஊழியர்கள் அதிகளவில் ஆஸ்திரேலியாவில் குடியேறியதாக Indian diaspora in Australia என்ற புத்தகத்தை எழுதிய ஜெயந்த் பாபட் கூறியிருக்கிறார்.
2006ம் ஆண்டில் ஜான் ஹோவர்ட் தலைமையிலான அரசு, ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள், பட்டம் பெற்ற பின்னர் நிரந்தரமாகக் குடியேற அனுமதித்தது. இந்தக் கவர்ச்சிகரமான அறிவிப்பு இந்தியர்கள் அதிகளவில் குடியேற ஒரு காரணமாகப் பார்க்கப்படுவதாக ஜெயந்த் பாபட் தெரிவித்திருக்கிறார்.
Sydney Morning Herald-ன் கூற்றுப்படி, 2001ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்து 56 ஆயிரமாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை, 2011-ல் இந்த 4 லட்சத்து 74 ஆயிரமாக உயர்ந்ததாகக் கூறியிருக்கிறது.
2016ம் ஆண்டில் 6 லட்சத்து 19 ஆயிரமாக அதிகரித்த இந்தியர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி, இந்தியாவில் பிறந்த புலம்பெயர்ந்தோரில் 85.3 சதவிகிதம் பேர் ஆஸ்திரேலியாவில் வேலைச் செய்வதாகவும், புலம் பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு விகிதம் 80 சதவிகிதமாக உள்ளதாகவும், The University of Queensland-ன் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
இதுபோன்ற புள்ளிவிவரங்கள், ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையில் இந்தியர்கள் கணிசமாக இருப்பதை உறுதி செய்கின்றன. இதன் காரணமாகவே குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்திருப்பதாகக் கூறப்பட்டாலும், இந்தப் போராட்டத்திற்குக் கடும் ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
இனவெறி, இனவாதத்திற்கு நாட்டில் இடமில்லை என்று கடுமையாகச் சாடியிருக்கிறது. நாட்டில் வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள ஆஸ்திரேலிய அரசு, சமீபத்திய போராட்டங்களை நாஜிக்களுடன் தொடர்புபடுத்தி விமர்சித்துள்ளது.