சீனா புதன் கிழமை நடத்தும் ராணுவ அணுவகுப்பில் பல ரகசிய ஆயுதங்களை உலகுக்குக் காட்ட திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழா சீனாவில் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, சீனாவில் மிகப்பெரிய அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெறும் வெற்றிக் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், உலகிற்குத் தனது ராணுவ வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் சீனா இந்த அணிவகுப்பை மேற்கொள்ளவுள்ளது.
இந்த அணிவகுப்பில் 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும், நூற்றுக்கணக்கான ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்றும் கூறப்படுகிறது. இவை அனைத்தும் ராணுவ போட்டியாளரான அமெரிக்காவுக்குத் தொழில்நுட்ப திறமையைக் காட்ட சீனா ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் உலகின் மிகச் சக்திவாய்ந்த லேசர் வான் பாதுகாப்பு அமைப்பு அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிக ஆபத்தான ஆயுதங்களான நீண்ட தூர ஏவுகணைகள், அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய துப்பாக்கி அமைப்புகள் உள்ளிட்ட ரகசிய ஆயுதங்களை உலகுக்குக் காட்ட சீனா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.