நெல்லை மாவட்டம், ராமையன்பட்டியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைகிடங்கில் புகை மூட்டம் காணப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் ராமையன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இங்கு அடிக்கடி தீ பற்றி எரிவதும், புகைமூட்டம் காணப்படுவதும் வாடிக்கையாக உள்ளது என அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்தனர்.
இந்நிலையில் உலர்ந்த நிலையில் இருக்கும் குப்பைகள் மீது மீண்டும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இருப்பினும் அங்கிருந்து அதிக அளவு புகை வெளியேறியதால் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணைக் கொட்டி புகையைத் தணிக்கும் பணி நடைபெற்றது.
குப்பைகளிலிருந்து வெளியேறும் புகைமூட்டத்தால் மூச்சுத்திணறல் உள்ளிட்டவை ஏற்படுவதாகப் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேதனைத் தெரிவித்தனர்.