வழக்கமான எரிபொருட்களுக்கு மாற்றாக ஹைட்ரஜனைக் கொண்டு ரயில்களை இயக்கும் முயற்சியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? பார்க்கலாம், இந்தச் செய்தி தொகுப்பில்.
காற்று மாசைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, கிரீன் ஹைட்ரஜன் ரயில்கள் குறித்த சோதனை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்காக, சென்னையில் உள்ள ICF தொழிற்சாலையில், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் இதுதொடர்பாக நடத்தப்படட முதற்கட்ட சோதனை வெற்றிப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள ஜிந்த்-பானிபட் வழித் தடத்தில் ரயிலை முழுமையாக இயக்கி சோதனைச் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில்களை 360 கிலோ ஹைட்ரஜனைப் பயன்படுத்தி 90 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய ரயில்களால் காற்று மற்றும் ஒலி மாசுபாடு முற்றிலும் தவிர்க்கப்படும் எனவும், ரயில்களில் 20 முதல் 25 நிமிடங்களில் எரிபொருளை நிரப்பி விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரயில்களின் இரண்டு புறங்களிலும் எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், 2,600 பேர் பயணிக்கும் வகையில் 8 வழக்கமான பெட்டிகள் இருக்கும் என விளக்கம் அளித்துள்ளனர்.
கிரீன் ஹைட்ரஜன் திட்டம் குறித்து அண்மையில் விளக்கம் அளித்த ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தலா 80 கோடி செலவில் 35 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
2070ம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத பயணத்தை இலக்காகக் கொண்டு இந்திய ரயில்வே இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தண்ணீரில் உள்ள மூலக்கூறுகளைப் பிரித்து பெறப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் உற்பத்தி செலவு குறையும் எனக் கூறப்படுகிறது. இதற்காக, ஹைட்ரஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பார போன்றவற்றின் வரிசையில், ஹைட்ரஜன் ரயிலும் இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.