தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடியின் புகைப்படம் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டிருப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் பேரிலேயே அரங்கில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தென்காசி மாநகராட்சியின் பாஜக கவுன்சிலர்களான ரேவதி, மகேஸ்வரி மற்றும் சங்கரநாராயணன்ஆகியோர் பிரதமரின் படத்தை மாட்டியுள்ளனர்.
ஆனால் தீர்மானம் காலாவதி ஆகிவிட்டதாகக் கூறி படத்தை அடாவடியாக அகற்றியுள்ளனர் ஆளும் அறிவாலய அரசின் உடன்பிறப்புகள்.
திமுக தலைவர்களின் படங்களெல்லாம் பாகுபாடின்றி அரசு அலுவலகங்களை அலங்கரிக்கையில், நமது பாரதத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளும் நமது பாரதப் பிரதமரின் படத்திற்கு மட்டும் எதற்கு இத்தனைக் கட்டுப்பாடுகள்?
நாட்டின் மதிப்பிற்குரிய அரசு பொறுப்பு வகிக்கும் ஒரு மூத்த தலைவருக்கு திமுக கொடுக்கும் மரியாதை இதுதானா? தமிழகத்தில் பாரதப் பிரதமர் இழிவுபடுத்தப்படுவது இது ஒன்றும் முதன்முறையல்ல.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட காயல்பட்டினத்தில் பிரதமரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதை அறிவோம். கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் தொடரும் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அனைத்தும் முழுக்க முழுக்க திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே.
அதிகாரம் கையிலிருக்கும் ஆணவத்தில் உலகின் மூத்த தலைவரை அவமதிக்கத் துணியும் அறிவாலயத்திற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.