கடலூர் மாவட்டம் அன்னவள்ளி கிராமத்தில் மழைநீர் வடிகால் அமைத்ததாகக் கூறி 13 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
அன்னவள்ளி கிராமத்தில் உள்ள ராணி காலனி பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்துக் கடந்த 2021-ம் ஆண்டு அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மழைநீர் வடிகால் அமைக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அன்னவல்லிப் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் பிரகாஷ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டுள்ளார்.
அப்போது, கடந்த 2021-ம் ஆண்டிலேயே ராணி காலனி பகுதியில் சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மழைநீர் வடிகால் அமைக்காமல் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.