ரஷ்ய அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் இருவரையும் அருகில் வைத்து கொண்டு எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம் என்று சீன அதிபர் பேசியிருப்பது, சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றிப் பெற்றது. ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது. இந்த வெற்றியின் 80-ம் ஆண்டு வெற்றிவிழா சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்றது.
ரஷ்ய அதிபர் புதின்,வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உட்பட சீனாவின் 26 நட்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், சீன ராணுவத்தின் பிரம்மாண்ட பேரணியும் நடைபெற்றது. சுமார் 70 நிமிடங்கள் நடந்த இந்த ராணுவப் பேரணியில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் முதல் நீர் மூழ்கி ட்ரோன் வரை பல்வேறு அதிநவீன ஆயுதங்கள் இடம்பெற்றிருந்தன.
நாட்டின் இராணுவ வலிமையை வெளிக்காட்டும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பங்கேற்ற அணிவகுப்பின் மரியாதையை சீன அதிபர் ஜி ஜின் பிங் ஏற்றுக் கொண்டார்.
புதிய சீனாவின் சிற்பியாகப் போற்றப்படும் மா சே துங் அணிந்திருந்த உடையை அணிந்து வந்த வெற்றிப்பேரணியில் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் சீனா அஞ்சாது என்று சூளுரைத்தார். மேலும், இன்று மனிதகுலம் போரா? அமைதியா ? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது போலவே வெற்றியா அல்லது முழுமையான தோல்வியா ? என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
வரலாற்றின் வலது பக்கத்தில் நிற்பதாகக் கூறிய சீன அதிபர், அமைதியான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், வீரமிக்க இராணுவமாக எப்போதும் முன்னணியில் இருக்கும் என்றும் சுட்டிக் காட்டியிருந்தார்.
தியானன்மென் சதுக்கத்தில் சீன இராணுவ அணிவகுப்பு தொடங்கிய உடனேயே, தனது சமூக ஊடகப் பக்கத்தில், ஜப்பானிடம் இருந்து சீனா சுதந்திரம் பெறுவதற்காக அமெரிக்கா உதவியதையும் அமெரிக்க வீரர்கள் ரத்தம் சிந்தியதையும் சீன அதிபர் குறிப்பிடுவாரா? என்று ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமெரிக்காவுக்கு எதிராகச் சதி செய்யும் புதினுக்கும் கிம் ஜாங் உன்னுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறும் ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனாலும், செய்தியாளர்களிடம், பேசிய ட்ரம்ப், சீனாவின் இராணுவ அணிவகுப்பை அமெரிக்காவுக்கான சவாலாகப் பார்க்கவில்லை என்றும், சீன அதிபருடன் சிறந்த நட்புறவைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்கத் தலைமையிலான உலக வர்த்தகத்துக்கு எதிராக, ஜி ஜின் பிங்,கிம் ஜாங் உன், புதின் மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் முதல்முறையாக வெளியானது. மாஸ்கோ-பெய்ஜிங்-பியோங்யாங் கூட்டணி, அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
















