வடமாநிலங்களில் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
வடமாநிலங்களில் இன்று விநாயகர் சதுர்த்தியின் இறுதிநாளாகும். ஆனந்த சதுர்த்தியான இன்று ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே 7வது நாளில் ஆயிரக்கணக்கான கணபதி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் எஞ்சிய சிலைகள் இன்று கரைக்கப்படும். இதில் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மும்பையின் தாதர், கிர்காவ், ஜுகு போன்ற கடற்கரைகளில் சிலைகளை கரைக்க மாநகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த விநாயகர் சிலை கரைப்பை சீர்குலைக்க போவதாகவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாகவும் மிரட்டல் வந்துள்ளது. இம்மிரட்டலை தொடர்ந்து, பொதுமக்கள் தேவையில்லாத வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.