கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாகக் கூறி வருகை தந்த அமைச்சர் ஒரு சிலரை மட்டும் சந்துத்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிப்காட் பகுதியில் பல்வேறு ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், ஒரு ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டது. இதனால் வெளியான புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக ஆலையை ஒட்டி வசிக்கும் பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் 90 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் அறிந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
அப்போது சிலரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் திமுக அமைச்சர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியதோடு, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடை அரசு வழங்க வேண்டும் எனவும், ரசாயன தொழிற்சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.