ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளியில் உள்ள கிளை சிறை ஒன்றில் பணியில் இருந்த காவலரை தாக்கி விட்டு தப்பியோடிய கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சோடவரம் நகரில் செயல்பட்டு வரும் கிளை சிறையில் ரவிக்குமார், ராமு ஆகியோர் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர்.
திருட்டு மற்றும் , நிதி முறைகேடு குற்றத்திற்காக தண்டனை பெற்று வந்த இவர்கள், சிறையின் சமையலறையில் பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தலைமை காவலரை, ரவிக்குமார் திடீரென்று சுத்தியலால் கடுமையாக தாக்கினார்.
இதனைக்கண்ட ராமுவும் காவலரை தாக்க தொடங்கினார். இதில் அந்த அதிகாரி ரத்த காயமடைந்த நிலையில் கைதிகள் இருவரும் சிறையின் கதவை திறந்து தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கைதிகளை தேடி வருவதோடு, சம்பவத்தின்போது சிறையின் நுழைவு வாயிலில் காவலர்கள் பணியில் இல்லாதது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.