சென்னையில் திமுக ஊராட்சிமன்ற பெண் தலைவர் தங்க நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகத் தேசிய பொதுக் குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னை நெற்குன்றம் பகுதியில் வசிக்கும் திமுகப் பெண் ஊராட்சி மன்றத் தலைவர்ப் பாரதி, 4 சவரன் நகைகளைத் திருடிய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது எனவும்
ஏற்கனவே இப்பெண் மீது பல வழக்குகள் இருப்பதாகச் செய்திகள் வருகின்றன எனவும் கூறியுள்ளார்.
திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல் திமுகக் கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என்று தமிழக மக்கள் வருந்தும் அளவிற்குச் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கத் திமுக அரசை வலியுறுத்துவதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்ட பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பேருந்துகளில் பிக்பாக்கெட் திருடுவது முதல் கருவூலத்தை சூறையாடுவது வரை திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்கச் சம வாய்ப்புகளை வழங்குகிறது என விமர்சித்துள்ளார்.