சட்டப்பேரவை தேர்தலில் திமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்தாலும் அக்கட்சியால் வெற்றி பெற முடியாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இரு வார சேவை 2025 என்ற தலைப்பில் பாஜக மாநில நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது இதில் பாஜக மாநில தலைவர் நயனார் நாகேந்திரன் பாஜக தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர் அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய நாகேந்திரன் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை இரு வாரங்களுக்கு சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் பாரத பிரதமரின் பிறந்தநாள் மூலமாக மக்களுடன் பாஜக நிர்வாகிகள் மேலும் நெருக்கமாக பழகி தொண்டாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் 2011 இல் கருணாநிதி அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாமல் ஜாதி கட்சிகளை இணைத்து பெரிய கூட்டணி அமைத்தார், ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை. அதேபோல இந்த முறை திமுக பெரிய கூட்டணி என சொல்லிக் கொண்டாலும் திமுக ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் திமுக மீதான மக்களின் அதிருப்தி காரணமாக வெல்ல முடியாத சூழல் நிலவுகிறது என தெரிவித்தார்.
நம் கூட்டணியில் பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்கள், எனவே தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து பாஜக நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.