தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் கண்காணிப்பாளரை, காவலர் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திர கிரகணத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் நடை இன்று பிற்பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட காவலர் பிரபாகரன் என்பவர், தனக்கு தெரிந்தவர்களை மட்டும் மூத்த குடிமக்களுக்கான வரிசையில் செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதனை தடுத்த கோயில் கண்காணிப்பாளர் விவேக் மீது காவலர் பிரபாகரன் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் காயமடைந்த விவேக் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளாமல் இருக்க, கோயில் கண்காணிப்பாளர் தாக்கியதில் காயமடைந்ததாக காவலர் பிரபாகரனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோயில் கண்காணிப்பாளர் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில் பலரும் காவலரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.