அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநரை, விமான நிலையத்திலேயே வைத்து மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மலையாள சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநராக உள்ளவர் சனல் குமார் சசிதரன். இவர் ஆன்லைன் மூலம் தனக்கு மிரட்டல் விடுப்பதாகக் கூறி மலையாள நடிகை ஒருவர் கேரள காவல்துறையில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கேரள போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால் அப்போது சனல் குமார் சசிதரன் அமெரிக்காவில் இருந்தார். இதனையடுத்து அவர் மீது கேரள போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய சனல் குமார் சசிதரனை, மும்பை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர். இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சனல் குமார், தான் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறேன் என தெரியவில்லை என்றும், கேரள அரசு தன்னை சட்டத்தின்படி நடத்தும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மும்பை போலீசாருடன் கேரள காவல்துறையினர் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் அவரை கேரளா அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.