ரஷ்யா மீது 2ம் கட்ட பொருளாதார தடை விதிக்க தயாராக உள்ளதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில், அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் கூடுதல் வரி விதித்தால் ரஷ்யாவின் பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் என கூறினார்.
மேலும், உக்ரைனின் ராணுவமும், ரஷ்ய பொருளாதாரமும் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும் என்பதற்கான போட்டி நடைபெற்று வருவதாகவும், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதித்தாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், புதினை தண்டிக்கும் விதமாக ரஷ்யா மீது 2ம் கட்ட பொருளாதார தடை விதிக்க தயாராக உள்ளீர்களா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆம். நான் தயாராக உள்ளேன்” என தெரிவித்தார். ஆனால், எத்தகைய தடைகள் ரஷ்யா மீது விதிக்கப்படவுள்ளது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.