விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகே அவருக்கும், விசிகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, கத்தியை கொண்டு தாக்கியதாக ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தனர். அதன் பேரில், மெரினா காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி, மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.