பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கடத்தப்பட்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பிரபாகரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.
சிறிது நேரத்தில் அவரது செல்போனும் ஸ்விட் ஆஃப் செய்யப்படவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பள்ளிப்பாளையம் போலீசார், மூன்று தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்தனர்.
இதனிடையே, ஒரு கோடி ரூபாய் கேட்டு பிரபாகரனை மிரட்டிப் பார்த்த கடத்தல்காரர்கள், பணம் கிடைக்காத விரக்தியில் அவரை தஞ்சை அருகே இறக்கிவிட்டு தப்பியோடினர்.
பிரபாகரன் அளித்த தகவலின் அடிப்படையில் காடச்சநல்லூர் ஊராட்சி செயலாளர் நந்தகுமார் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.