சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் வரும் பள்ளி வளாகத்தை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகை விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கண்டோன்மெண்ட் பள்ளியில் கடந்த 5ஆம் தேதி ஆசிரியர்த் தினத்தை அவமதிக்கும் வகையிலும், சட்டத்திற்குப் புறம்பாகவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வாடகைக்கு விடப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளி வளாகத்தில் திருமண நிகழ்ச்சி அனுமதி அளித்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக ஆன்லைன் மூலமாக மத்திய அரசுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகப் பல்லாவரம் கண்டோன்மெண்ட் நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். அதில், கண்டோன்மெண்ட் நிர்வாகிகத்தின் கீழ் 2 திருமண மண்டபங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆன்லைன் குளறுபடி காரணமாக 2 திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சி நடத்த 3 நபர்களுக்கு அனுமதி அளித்ததாகவும் கூறியுள்ளனர்.
மூன்று நபர்களும் ஒரேநாளில் நிகழ்ச்சி நடத்த வந்துவிட்டதால் வேறு வழியின்றிப் பள்ளியின் மைதானத்தில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கியதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.