நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை, அரசுக்கு எதிரான போராட்டத்தால் கைவிடப்பட்டது.
நேபாளத்தில் அரசுக்கு எதிராக நடக்கும் விவாதங்களைக் கண்காணித்து தகவல் வழங்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் விதித்த அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த விதிமுறையை வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக வலைதள நிறுவனங்கள் பின்பற்றவில்லை எனக்கூறி நேபாள அரசு தடை விதித்தது.
ஒட்டுமொத்தமாக திடீரென சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் நேபாள இளைஞர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் நாடே ஸ்தம்பித்தது.
இதனால் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கையும் மீறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திலும், அருகே உள்ள பகுதிகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்ததால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
மேலும், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 19 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.