காஞ்சிபுரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை சீருடையில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ் மருத்துவ பரிசோதனைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.
பூசிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் ஏற்பட்ட தகராறு காரணமாக சிமெண்ட் முருகன் என்பவர் கடந்த மாதம் காவல் நிலையத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். ஆனால் ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் சிமெண்ட் முருகன் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் விசாரணையில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறி, சங்கர் கணேஷை செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
தொடர்ந்து காவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டிஎஸ்பி சங்கர் கணேஷ் போலீஸ் வாகனத்தில் தப்பியோடியதாக தகவல் பரவியதால் பதற்றம் நிலவியது.
தொடர்ந்து தப்பியோடியதாக கூறப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ் கிளை சிறைக்கு போலீஸ் வாகனத்தில் வந்தடைந்தார். இதையடுத்து டிஎஸ்பி மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.