நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றன என்றும், வாக்கு திருட்டு என்ற சொல்லாடல் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும் முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்ததாகவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் எஸ்.ஒய்.குரேஷி, ஓ.பி.ராவத், அசோக் லவாசா ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, நம் நாட்டில் தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டு என்ற சொல்லாடல், அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றும்,
வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை யாராலும் அறிய முடியாது என்றும் அசோக் லவாசா கூறியுள்ளார்.
முன்னாள் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தேர்தலில் வெற்றிபெற கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யும் என குறிப்பிட்டார். வாக்கு திருட்டு என்ற சொல்லாடல், அரசியல் ஆதாயத்தின் ஒரு பகுதியே என்றும், நம் நாட்டில் நடக்கும் தேர்தல்கள் உலகிற்கு முன்னுதாரணமாக இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.
நியாயமான தேர்தல்களை உறுதிசெய்ய பிழையில்லாத வாக்காளர் பட்டியல் அவசியம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, கூறினார்.
வாக்காளர் பட்டியல் சரியாக இல்லாவிட்டால், தேர்தல்களை நம்பகமானதாக கருத முடியாது எனக் கூறியுள்ள குரேஷி, சில அரசியல் பிரச்னைகள், தேர்தல் ஆணையத்தின் நற்பெயரை கெடுப்பதை நாம் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.