சிறுநீரகத் திருட்டு விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ கதிரவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிறுநீரகத் திருட்டு நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி சமயபுரம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பரஞ்சோதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுநீரகத் திருட்டு விவகாரம் குறித்து திமுக எம்.எல்.ஏ கதிரவன் பேசியதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்தார்.
சிறுநீரகத் திருட்டில் ஈடுபட்ட கும்பல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறிய அவர், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ கதிரவன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவில் இருந்து யார் பிரிந்து சென்றாலும், கட்சிக்குப் பின்னடைவு இல்லை எனக் கூறினார்.