இந்தியாவின் முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், இம்மாத இறுதிக்குள் தண்டவாளங்களில் பறக்க உள்ளதாக இனிப்பான செய்தியை தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. எந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. வசதிகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம் விரிவாக.
இந்தியாவில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அதிகம் விரும்புவது குறைவான கட்டணத்தில் நிறைவான பயண அனுபவத்தைத் தரும் ரயில் பயணத்தைத் தான். பல கோடி மக்களுக்கு விருப்பமான பயணத் தேர்வான ரயில்களில் காலத்திற்கேற்ப நவீனத்துவத்தை புகுத்தி வருகிறது ரயில்வே துறை.
அம்ரித் பாரத், நமோ பாரத், வந்தே பாரத் வரிசையில், பயணிகள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்களை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்துகிறது ரயில்வே துறை.
தீபாவளி பரிசாக அறிமுகப்படுத்தப்படும் Vande Bharat Sleeper Express, டெல்லி – பாட்னா இடையே தடம் பதிக்க உள்ளது. பிரயாக்ராஜ் வழியாக இயக்கப்படும் இந்த ரயில், 1000 கிலோ மீட்டர் தொலைவை 11 மணி நேரம் 50 நிமிடங்களில் அடையும்.
இதே வழித்தடத்தில் இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 1000 கிலோ மீட்டர் தொலைவை 23 மணி நேரத்தில் கடக்கும் நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில், பயண நேரத்தைப் பாதியாக குறைக்கிறது என்பதால், மக்களிடையே அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
நீண்டதூர பயணத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில், 180 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது. விமானத்திற்கு நிகரான வசதிகளை கொண்டிருக்கும் இந்த ரயில், இரவு நேர பயணிகளுக்குச் சொகுசான பயண அனுபவத்தை தரும். 16 பெட்டிகளை கொண்டுள்ள இந்த ரயிலில், 1128 பயணிகள் தாராளமாகப் பயணிக்கலாம். AC First Class, AC 2 Tier, AC 3 Tier என மூன்று பிரிவுகள் உள்ளதால், பலதரப்பட்ட மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயணிக்க முடியும்.
அடுத்த நிறுத்தம் பற்றிய அறிவிப்புகளை வழங்கும் ரியல்-டைம் ஆடியோ, வீடியோ சிஸ்டம், தகவல்ளை பளிச்சென காட்டும் எல்இடி திரைகள், பாதுகாப்புக்குச் சிசிடிவி கேமராக்கள் என ஒட்டுமொத்தமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் பாதுகாப்பான பயண அனுபவத்தைத் தரும்.
sliding doors, touch-free bio-vacuum toilets, மாற்றுத்திறனாளிகளுக்கு என வசதியான படுக்கை வசதி, சுகாதாரமான கழிவறை வசதி, USB சார்ஜிங் போர்ட், ரீடிங் லைட் போன்றவற்றை இந்த ரயில் வழங்குகிறது. குறிப்பாக First AC coache-களில் பயணிகள், நகரும் 5 ஸ்டார் ஹோட்டல் அனுபவத்தை பெற முடியும்..
விமானத்திற்கு நிகரானது என்றால் கட்டணமும் அதிகமாக இருக்குமோ என்று எண்ண வேண்டிய அவசியமே இல்லை என்கிறது ரயில்வே. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை விட 10 முதல் 15 சதவீதம் மட்டுமே கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்ற செய்தி உண்மையில் பயணிகளை திக்குமுக்காடவே வைத்திருக்கிறது.
வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான பெட்டிகள் அனைத்தும், BEML நிறுவனத்துடன் இணைந்து ICF வடிவமைத்திருக்கிறது. advanced engineering, premium comfort, modern technology என இந்த ரயில் சொகுசான பயண அனுபவத்தை தரும் என்பதை உறுதி செய்திருக்கிறது ரயில்வே. emergency braking mechanisms, anti-climbing technology, Kavach anti-collision technology போன்றவை பயணிகளின் பாதுகாப்பில் உள்ள முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
முதல்முறையாக டெல்லி – பாட்னா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில், பாட்னாவில் இருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு டெல்லியை சென்றடையும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாராகி வருவதாகவும், அவற்றில் சில 2026ம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி – அகமதாபாத், டெல்லி – போபால், டெல்லி – மும்பை, டெல்லி – புனே மற்றும் டெல்லி – செகந்திராபாத் உள்ளிட்ட வழித்தடங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. பயணிகள், ரயில் கட்டணத்தை செலுத்தி விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை உணர்வார்கள் என்று அடித்துச் சொல்கிறது ரயில்வே.