குடியரசாக மாறியதிலிருந்து அரசியல் குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் பெயர் பெற்ற நேபாளத்தில் ஜென் Z இளைஞர்கள் போராட்டம், பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இமயமலை அடிவாரத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு அழகிய நாடு நேபாளம் ஆகும். சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ராணா வம்சத்தை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்குவதற்காக ஆயுதப் புரட்சி நடந்தது.
ராணாவின் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. 1951ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனநாயகம் மலர்ந்தது. மன்னர் திரிபுவன் அரியணையில் ஏறினார். இடைக்கால அரசு மற்றும் இடைக்கால அரசியல் அமைப்பை உருவாக்குவதாக அவர் அறிவித்தார்.
1955-ல் துரதிர்ஷ்டமாக மன்னர் இறந்ததால், மகேந்திரா அரியணை ஏறினார். 1959-ல் முடியாட்சியின் கீழ் அதிகாரத்தை ஒருங்கிணைக்கும் “பஞ்சாயத்து” முறையை அறிமுகப்படுத்தினார். முதன்முறையாகப் பொது தேர்தல் நடத்தப்பட்டது.
நேபாளக் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஓராண்டில்,அனைத்து அரசியல் கட்சிகளையும், நாடாளுமன்றத்தையும்,அரசியல் அமைப்பையும் மன்னர் மகேந்திரா தடைச் செய்தார். 1972-ல் மன்னர் மகேந்திரன் மரணத்துக்குப் பிறகு மன்னர் பிரேந்திரா அரியணை ஏறினார். நேபாளக் காங்கிரஸ் ஜனநாயக ஆட்சிக்கான போராட்டத்தைத் தொடங்கியது.
கட்சிகள் மீதான தடையை நீக்கிய மன்னர் பிரேந்திரா, முடியாட்சியின் கீழ், ஜனநாயக அரசு செயல்படும் வகையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். 1991-ல் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலில் நேபாளக் காங்கிரஸ் வெற்றிப் பெற்றது. 1996-ல் முடியாட்சிக்கு முடிவு கட்ட மாவோயிஸ்ட் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது.
10 ஆண்டுகாலம் நடந்த ஆயுதக் கிளர்ச்சியில்,17,000க்கும் மேற்பட்டோர்க் கொல்லப்பட்டனர். இந்த ஆயுதப் போராட்டம், கிராமப்புறங்களை எல்லாம் அழித்தது. ஆயிரக்கணக்கானவர்களை இடம்பெயர வைத்தது. மேலும் அரசு நிறுவனங்களையும் நிர்வாகத்தையும் கடுமையாகப் பலவீனப்படுத்தியது.
2001-ல் எதிர்பாராத விதமாக அரசக் குடும்பத்தில், பட்டத்து இளவரசர்த் திபேந்திரா நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஞானேந்திரா தவிர மன்னர்ப் பிரேந்திரா குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
தற்கொலைக்கு முயன்ற திபேந்திரா சாகவில்லை. ஓராண்டாகக் கோமாவில் இருந்து உயிரிழந்தார். எனவே மன்னர் ஞானேந்திரா நேபாள அரசராக அரியணை ஏறினார். சிறப்பு அவசர நிலை அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாட்டின் மீதான நேரடி கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டார். மூன்று மாதங்களில், சர்வதேச அழுத்தத்தின் காரணமாக நாட்டின் அவசர நிலையை நீக்கினார்.
2008ம் ஆண்டு மே 28ம் தேதி, 240 ஆண்டுகால முடியாட்சி முடிவுக்கு வந்தது. நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாறியது. மன்னர் ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறி, தலைநகரில் நிர்மல் நிவாஸில் சாதாரண குடிமகனாக வாழத் தொடங்கினார். இந்த 17 ஆண்டுகளில் 14 வெவ்வேறு அரசுகளை நேபாளம் கண்டுள்ளது.
எந்த அரசும், முழுமையாக ஐந்து ஆண்டு காலம் பதவியில் நீடிக்கவில்லை. மேலும், இதுவரை ஆறு அரசியல் அமைப்பு சட்டங்கள் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு சட்டம் 2015ம் ஆண்டு கொண்டு வரப் பட்டதாகும்.
நேபாள அரசியல் அமைப்பின் படி, நாடாளுமன்றத்தில் உள்ள 275 உறுப்பினர்களில், 165 பேர் நேரடி பொது தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் 110 உறுப்பினர்கள் மக்கள் தொடர்பு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் முதல் மற்றும் இரண்டாவது பெரிய கட்சிகளாக உள்ளன. நேபாளக் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
அரசியல் ஆதாயத்துக்காகக் கூட்டணியை விருப்பம் போல் மாற்றிக் கொள்ளும் சுயநல அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மக்களுக்கு அரசின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையைக் குலைத்தது. நீண்டகாலமாக இருந்த கோபம் ஜென் Z இளைஞர்கள் போராட்டத்தால், நேபாள அரசைக் கீழே தள்ளியுள்ளது.
2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 14 ஆம் தேதி, நேபாள அரசியலமைப்பு சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, தனது சொந்த விதியைத் தேர்ந்தெடுக்கும் நேபாளத்தின் இறையாண்மை உரிமையை இந்தியா எப்போதும் ஆதரிக்கும் என்றும், இமயமலையைப் போல உயர்ந்து, முழு உலகுக்கும் ஒரு முன்மாதிரியாக நேபாளம் மாறும் என்றும், ஒரு ஜனநாயக மற்றும் வளமான நேபாளத்தையே இந்தியா விரும்புவதாகக் கூறினார்.
நேபாளத்தின் அரசியலமைப்பு சபையில் உரையாற்ற அழைக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவர் மற்றும் ஒரே வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
















