பிரான்ஸில் அரசுக்கு எதிரான போராட்டம் அந்நாட்டு அதிபர் மேக்ரானுக்குப் புதிய சவாலாக அமைந்துள்ளது. வாகனங்களுக்குத் தீ வைப்பு, கண்ணீர் புகை குண்டு வீச்சு என, வன்முறையால் அந்நாடே ஸ்தம்பித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
.அழகான நிலப்பரப்புகள், புகழ்பெற்ற நகரங்கள், உலக அதிசயம் என எண்ணிலடங்கா பெருமைகளை தன்னகத்தே கொண்டது பிரான்ஸ். கலை, கலாச்சாரம், உணவு உள்ளிட்ட தனித்துவமான அடையாளங்களுடன், இலக்கியத்தின் மையமாகவும், உலகின் முதன்மையான சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் திகழும் பிரான்ஸ், தற்போது இரண்டு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது.
பிரான்ஸில் அரசியல் கொந்தளிப்பு நிலவும் அதே வேளையில், பொதுமக்களின் நாடு தழுவிய போராட்டம் அதிபர் மேக்ரோனுக்குப் புதிய சவாலாக மாறியுள்ளது. பிரதமராக இருந்த பிரான்சுவா பேய்ரூ, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் பல தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்தது.
இதனால் பட்ஜெட்டை நிறைவேற்ற நாடாளுமன்ற ஆதரவைப் பெற நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார் பேய்ரூ. அதன்படி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரான்சுவா பேய்ரூ தோல்வியடைந்தாா்.
இதனால் பிரதமராகப் பொறுப்பேற்ற 9 மாதங்களில் அவா் பதவி விலக நேரிட்டது. மீண்டும் தேர்தல் நடத்துவதைத் தவிர்க்கவும், நெருக்கடியைச் சமாளிக்கவும் அதிபர் மேக்ரான், புதிய பிரதமராகச் செபாஸ்டியன் லெகோா்னுவை நியமித்தாா்.
பிரான்ஸின் 39 வயதேயான இளம் ராணுவ அமைச்சரான செபாஸ்டியன் லெகோா்னு, அதிபர் இமானுவல் மேக்ரானின் தீவிர ஆதரவாளர். 2017 முதல் மேக்ரானின் ஒவ்வொரு அரசாங்கத்திலும் பணியாற்றியுள்ள அவர், 2 ஆண்டுகளுக்குள் பிரான்ஸின் 5ஆவது புதிய பிரதமராகத் தோ்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அதிபர் மேக்ரானின் இந்த முடிவு எதிர்க்கட்சிகள் மத்தியில், குறிப்பாக இடதுசாரிகளிடையே கோபத்தைத் தூண்டியது. மேலும், அரசின் பட்ஜெட் சார்ந்த சிக்கன நடவடிக்கையும், அதிபரின் அரசியல் செயல்பாடுகளும் மக்களையும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இதனால் அனைத்தையும் முடக்குவோம் என்ற கருப்பொருளுடன் சமூக ஊடகங்களில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி புதன் கிழமை, பல நகரங்களில் சாலைகளில் திரண்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களுக்குத் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரீஸில் கலவரத் தடுப்புப் பிரிவு போலீசார், கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அரசுக்கு எதிரான வன்முறையில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டன.
பிரான்ஸ் முழுவதும் 80 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு கூட்டத்தைக் கலைத்தனர். தலைநகரில் மட்டும் குறைந்தது 132 பேர் கைது செய்யப்பட்டதாகவும், நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் இவ்வாறு போராட்டம் நடப்பது இது முதல்முறை அல்ல. மேக்ரானின் முதல் ஆட்சிக் காலத்திலேயே அங்கு வெடித்த போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, 2022- இல் பென்ஷன் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு மற்றும் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் பிரான்ஸில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழல், அதிபர் இமானுவேல் மேக்ரானுக்குப் புதிய சவாலாக அமைந்துள்ளது.