உத்தரப்பிரதேசத்தில் 15 நாள் பச்சிளங்குழந்தையை தாயே குளிர்சாதனப் பெட்டியில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொரதாபாத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். நிறைமாத கர்ப்பிணியான அவருக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
வழக்கம் போல் குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டு இருந்தது. அப்போது தாய், குழந்தையை எடுத்துச் சென்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கதவை மூடினார். ஆனால் குழந்தையை குளிர்சாதனப் பெட்டியில் வைத்ததை மறந்து விட்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு குளிர்த் தாங்காமல் குழந்தை அழுதது. குழந்தை அழும் சத்தத்தை கேட்ட வீட்டில் இருந்தவர்கள் குழந்தையை வீடு முழுவதும் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இறுதியாகக் குளிர்சாதன பெட்டியைத் திறந்த பார்த்த போது குழந்தை இருந்தது தெரியவந்தது. உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், குழந்தையின் தாயை மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பிரசவத்திற்குப் பிறகு பல்வேறு வகையான தொற்றுக்கள் ரத்தப்போக்கு, உடல்நல பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகிறது. மேலும் மறதி, சோகம், கவலை, பயம், பதற்றம், தூக்கமின்மை, எரிச்சல் மற்றும் அமைதி இழப்புகளாலும் இது போன்ற பிரச்சனைகள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எனவே, குழந்தைப் பெற்ற பெண்களுக்குக் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், உறவினர்கள் பக்கபலமாக இருந்து கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.