வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வந்து பணியாற்றுமாறு மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் கடந்த 1975 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட், வாஷிங்டனில் உள்ள ரெட்மண்டை தலைமையிடமாக கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றால் சமூக இடைவெளி காரணமாக வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்தது. தற்போதும் பல ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
சமீபத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மைக்ரோசாஃப்ட் மேற்கொண்டதால் மே மாதத்தில் இருந்து குறைந்தது 15 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.
இந்த சூழலில், ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலை செய்ய வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதி 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.