உலகில் அமெரிக்கா கொண்டிருக்கும் சிறந்த உறவுகளில் இந்தியாவும் ஒன்று என, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பரான செர்ஜியோ கோர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். செர்ஜியோ கோரை அறிமுகப்படுத்துவதற்காக வாஷிங்டனில் நடைபெற்ற செனட் சபையின் குழுக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உலகளாவிய எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா “அதன் மையத்தில்” உள்ளது என்பதை எடுத்துக்காட்டிய மார்கோ ரூபியோ, 21ஆம் நூற்றாண்டின் கதை இந்தோ-பசிபிக் பகுதியில் எழுதப்பட உள்ளதாக கூறினார்.
இந்தியாவுடனான உறவில் அசாதாரண மாற்றத்தின் காலகட்டத்தில் இருப்பதாகவும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி தீர்க்க வேண்டிய சில முக்கியமான பிரச்சினைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், செர்ஜியோ கோரின் குணங்கள் இருநாடுகளுக்கு இடையே நல்ல உறவை ஏற்படுத்தி தரும் என்றும் மார்கோ ரூபியா தெரிவித்தார்.