அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 24 வருடங்கள் ஆகிய நிலையில், தாக்குதலின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, இன்று வரை பேசுபொருளாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாத அளவுக்கு அப்படி என்ன புகைப்படம் அது? … விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
21-ம் நூற்றாண்டின் தொடக்கம் அது. அமெரிக்காவுக்குத் தெரியாமல் குண்டூசியைக் கூட நகர்த்த முடியாது என்ற காலம் அது. அப்படியான ஒரு தோற்றத்தைத் தான் உலக நாடுகள் மத்தியில் கட்டமைத்திருந்தது அமெரிக்கா. ஆனால், அந்தப் பிம்பந்தை சுக்கு நூறாக்கும் வகையில், அல்குவைதா பயங்கரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட, உலகமே அதிர்ந்து போனது.
2011 ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நான்கு அமெரிக்க விமானங்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகள், அதில் இரண்டு விமானங்களை உலக வர்த்தக மையம் அமைந்திருந்த ட்வின் டவர் மீது மோதச் செய்து, கோழைத்தனமான தாக்குதலை நடத்தினர்.
இதில் 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழக்க, தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஒசமா பின்லேடனை அமெரிக்கத் தேடி தேடி வேட்டையாடிய சம்பவம் எல்லாம் அரங்கேறியது.
ஆனால், இப்போது அது குறித்து விவாதிக்கப்போவதில்லை. இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது, ஒருவர் தலைகீழாக குதிப்பது போன்ற புகைப்படம் 24 ஆண்டுகளாகப் பேசுபொருளாகவே இருக்கிறது. அதுகுறித்துத் தான் அலசப்போகிறோம்.
பயங்கரவாத தாக்குதலின் போது எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி மனதை உலுக்கிய நிலையில், இந்தப் புகைப்படம் மட்டும் மர்மமாகவே நீடிக்கிறது.
ASSOCIATED PRESS பத்திரிகையை சேர்ந்த புகைப்பட கலைஞர் RICHARD DREW என்பவரால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம், ஒரு நபர் உயரமான கட்டத்தில் இருந்து தலைகீழாகக் குதிப்பது போன்று பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் பதட்டமாக இருப்பது போல் எல்லாம் தெரியவில்லை.
கொஞ்சம் கூட அசராமல், Relax-ஆக Casual -ஆக குதிப்பது போன்றே தெரிகிறது. மற்ற புகைப்படங்களில் இருக்கும் நபர்கள் எல்லாம், கீழே குதித்த போது பேலன்ஸ் இல்லாமல் தடுமாறியது தெளிவாகப் பதிவாகி இருக்க, RICHARD DREW எடுத்த புகைப்படத்தில் பதிவாகிய நபர் மட்டும், ஒரு சூப்பர் ஹீரோ கீழே குதித்தால் எப்படி இருக்குமோ? அதே போன்று கீழே குதிக்கிறார்.
இரட்டை கோபுரத்துக்கு அருகில் நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற RICHARD DREW, தாக்குதல் குறித்த செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அவர் அங்கு சென்ற போது, இரண்டாவது கோபுரம் ஏற்கனவே தகர்க்கப்பட்டு விட்டது.
தீ மளமளவெனப் பரவி கொண்டிருக்க, அதில் இருந்து தப்பிக்க நினைத்த ஊழியர்கள், வேறு வழியின்றிக் கீழே குதிக்க, அதை RICHARD DREW புகைப்படம் எடுத்துள்ளார். 12-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவர் எடுத்தபோதும், இந்த ஒரு புகைப்படத்திற்கு மட்டும் இன்றுவரை விடை கிடைக்கவில்லை.
THE NEW YORK TIMES பத்திரிகையில் தான் இந்தப் புகைப்படம் முதன் முதலாக வெளியிடப்பட்டது. ஆனால், மக்கள் இதனை நம்ப தயாராகவே இல்லை. மாயை என்ற கருத்தையே பெரும்பாலானோர் முன்வைத்தனர்.
TIME MAGAZINE,THE SUN போன்ற முன்னணி பத்திரிகைகளும் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டது மட்டுமில்லாமல், அதன் உண்மை தன்மையையும் ஆராயத் தொடங்கின. அதன்படி, வடக்கு கோபுரத்தில் அமைந்திருந்த பிரபல உணவகமான WINDOWS ON THE WORLD-ன் ஊழியர் அவர் எனச் செய்தி வெளியிட்டன. 106 மாடியில் அமைந்திருந்த உணவகத்தில் சமையல் கலைஞராகப் பணியாற்றிய Norberto Hernandez தான் அவர் என்றும் கூறின.
Hernandez-ன் சகோதர, சகோதரியிடம் புகைப்படத்தைக் காண்பித்து கேட்ட போது, கீழே குதிப்பது தங்கள் சகோதரர் தான் எனக் கூறினர். ஆனால், மற்ற குடும்ப உறுப்பினர்களோ இல்லை இல்லை என மறுப்பு தெரிவித்தனர்.
இப்படி 24 ஆண்டுகளாக விடையே கிடைக்காமல், ஒரு புகைப்படம் மக்களை குழப்பிக்கொண்டிருக்க, இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நாளில் மீண்டும் விவாதமாக உருவெடுத்துள்ளது.