பிரான்ஸ் நாட்டின் Safron நிறுவனத்துடன் இணைந்து இந்தியா உள்நாட்டிலேயே அதிநவீனப் போர் விமான என்ஜின்களை உருவாக்க உள்ளது. இந்தப் போர் விமான என்ஜின்கள், இந்தியா தயாரிக்கும் 5-ஆம் தலைமுறை Advanced Medium Combat Aircraft போர் விமானங்களில் பயன்படுத்தப்படவுள்ளன. போர் விமான என்ஜின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடையும் இந்தியாவின் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
விண்வெளித் துறையில் மிகவும் கடினமான மற்றும் உயர் துல்லிய தொழில்நுட்பங்களில் போர் விமான என்ஜின் ஒன்றாகும். செயற்கைக்கோள்களை வடிவமைப்பதில் உலகளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவுக்கு, போர் விமான என்ஜின் உற்பத்தி தொழில்நுட்பம் கை கூடாமலேயே இருந்தது.
காவேரி என்ஜின் திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு உள்நாட்டுப் போர் விமான என்ஜினை உருவாக்கும் பணியைத் தொடங்கியது. 1989ம் ஆண்டு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், நாட்டின் இலகுரகப் போர் விமானத்தை (LCA) இயக்கும் நோக்கம் கொண்டதாகும்.
சுமார் 100 கிலோ நியூட்டன் உந்துதலை உருவாக்கும் வகையில் இலகு ரக மற்றும் நடுத்தர வகுப்பு போர் விமானங்களுக்கு ஏற்ற வகையில் காவேரி எஞ்சின்களை DRDOவடிவமைத்துள்ளது. எனினும், இந்தக் காவேரி என்ஜின் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை.
இதனால், தேஜஸ் Mk1 போர்விமானத்தில் GE F404 என்ஜினையும், தேஜஸ் Mk2 ஆகிய போர்விமானங்களில், சக்தி வாய்ந்த அமெரிக்காவின் GE F414 என்ஜினையும் நம்பி இருக்க வேண்டியுள்ளது.
சமீபத்தில், GE Aerospace நிறுவனம் தனது என்ஜின்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், தேஜஸ் போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு ஒப்படைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
தனது முழு கட்டுப்பாட்டில்,போர் விமான திட்டத்தை வைத்திருக்க வேண்டுமானால், இந்தியா உள்நாட்டிலேயே போர்விமான என்ஜினை தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், காவேரி என்ஜினை உள்நாட்டில் உற்பத்தி செய்யவும் மற்றும் விநியோகச் செய்யவும் பிரான்ஸுடன் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.
இந்தியாவின் Gas Turbine Research Establishment நிறுவனமும், பிரான்ஸின் Safran நிறுவனமும் இணைந்து போர்விமான என்ஜின்களைத் தயாரிக்க உள்ளன. இந்தத் திட்டம் முழுமையாக இந்தியாவின் அறிவுசார் உரிமைகள் (IPR) கீழ் நடைபெற உள்ளது. முக்கியமாக, கிரிஸ்டல் பிளேடு (Crystal Blade) தொழில்நுட்பம் உட்பட தனது அனைத்துத் தொழில்நுட்பங்களையும், முழுமையாக 100 சதவீதம் DRDO-க்கு சஃப்ரான் நிறுவனம் ஒப்படைக்கவுள்ளது.
இதன் மூலம் 120 கிலோ நியூட்டன் சக்தி கொண்ட போர் விமான என்ஜின்கள் உருவாக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளன. 12 ஆண்டுகளுக்குள் ஒன்பது முன்மாதிரி போர் விமான என்ஜின்களை உருவாக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, 140 கிலோ நியூட்டன் சக்தி கொண்ட போர் விமான என்ஜின்கள் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது இந்தியாவின் 5வது தலைமுறை போர் விமானம், இரட்டை என்ஜின் போர் விமானங்கள் மற்றும் எதிர்கால ட்ரோன்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. மேலும், இது ஒரு போர் விமானத்தை மட்டும் பற்றியது அல்ல. நாட்டின் முழு பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பையும் மேம்படுத்தும் தற்சார்பு மற்றும் தன்னம்பிக்கை பாரதத்தின் திறனைப் பற்றியது ஆகும்.