டெல்லி மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு இன்று காலை 11.40 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற வளாகம் பதற்றம் நிறைந்த இடமாக மாறியது. உடனடியாக அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயை வைத்து வளாகம் முழுவதும் சல்லடை போட்டு அலசினர். ஆனால் இதுவரை அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கவில்லை.
நாடு முழுவதும் போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுவும் அதுபோல இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை வைத்து மிரட்டல் விடுத்த நபரை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.