போர் விமானத்திற்கான 120 கிலோ நியூட்டன் திறன் கொண்ட இன்ஜினை உருவாக்கும் இந்தியா – பிரான்ஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சி வெற்றிகரமாக நிறைவடையும் நிலையில் உள்ளது.
அண்மையில் கொண்டாடப்பட்ட சுதந்திரத் தினத்தின் உரையின் போது, உள்நாட்டுப் போர் விமான இன்ஜின் மேம்பாட்டிற்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதேபோல, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், விரைவில் போர் விமான இன்ஜின்களைத் தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபடும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் உள்ள எரிவாயு டர்பைன் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பிரான்ஸின் சப்ரான் நிறுவனத்தின் கூட்டு முயற்சியால், நடுத்தர போர் விமானத்திற்கான இன்ஜினை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.
முதலில் 120 கிலோ நியூட்டன் திறனுடன் உற்பத்தி செய்யப்படும் இன்ஜின்கள், 12 ஆண்டுகாலக்கெடுவுக்குள் 140 கிலோ நியூட்டன் திறனாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஜெட் இன்ஜின்கள் இந்திய அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு விதிகளின் கீழ்த் தயார் செய்யப்பட உள்ளன. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைய உள்ளன.