அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நண்பரான சார்லி கிர்க்கைக் கொன்ற நபரை இன்னும் காவல் துறையினரால் அடையாளம் காண முடியவில்லை என்றாலும், அதிர்ச்சியூட்டும் இந்தப் படுகொலைப் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க வலதுசாரிகளில் மிகவும் செல்வாக்கு மிக்கக் குரல்களில் ஒருவரான 31 வயதான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப் பட்டார்.
அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழக வளாகத்தில், சுமார் 4,000 மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில், பார்வையாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
குறிப்பாக, துப்பாக்கி வன்முறைக் குறித்த கேள்விக்குப் பதில் சொல்லும் போது , ஒரே ஒரு துப்பாக்கி தோட்டா வெடிக்கும் சத்தம் கேட்பதும், கழுத்தில் ரத்தம் பீறிட்டு வர, சார்லி கிர்க் கீழே சரிவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கொலைச் செய்தவர் ஒரு மாணவர் என்று சந்தேகப்படும் அமெரிக்க காவல் துறை, படுகொலைக்குப் பயன்படுத்த பட்ட உயர் ரகத் துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளது. சார்லி கிர்ப் பேசிக்கொண்டிருந்த இடத்திலிருந்து 150 மீட்டர்த் தொலைவில் கட்டிடத்தின் மாடியிலிருந்து மர்ம நபர்ச் சுட்டதாக காவல்துறைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கொடியும், கழுகும் வரையப்பட்ட கருப்பு நிற டீ-சர்ட்டில் கன்வர்ஸ் ஷூ மற்றும் சன்கிளாஸ் அணிந்த கல்லூரி மாணவர் போல் இருந்த நபர், படுகொலை சம்பவத்துக்கு முன்னதாக மாடி படிக்கட்டுகளில் ஏறுவதையும்,கொலைக்குப் பிறகு, மாடியில் இருந்து குதித்து, வாகன நிறுத்துமிடத்துக்கு அடுத்துள்ள புல்வெளியைக் கடந்து அருகிலுள்ள ஒரு காட்டுப் பகுதிக்குள் தப்பியோடும் காட்சிகளை FBI தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
சார்லி கிர்ப் படுகொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரகத் துப்பாக்கியை காவல்துறை கைப் பற்றியுள்ளது. பழைய மாடல் இறக்குமதி செய்யப்பட்ட மவுசர் காலிபர் போல்ட்-ஆக்சன் ரைபிள் துப்பாக்கி, பள்ளிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் ஒரு துண்டில் சுற்றப்பட்டுக் கிடந்தது என்று கூறப்பட்டுள்ளது.
போல்ட்-ஆக்சன் துப்பாக்கிகள் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளை விட மிகவும் துல்லியமாகச் சுடக் கூடியவை என்றும், பொதுவாக துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வேட்டைக்காரர்களால் பயன்படுத்தப்படும் என்றும் கூறப் படுகிறது.
குற்றவாளி குறித்த ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு FBI வலியுறுத்தியுள்ளது. இதுவரை, பொது பாதுகாப்புத் துறைக்குச் சுமார் 7,000க்கும் மேற்பட்ட குறிப்புகள் கிடைத்துள்ளன. இது 2013-ல் பாஸ்டன் மராத்தான் குண்டுவெடிப்புக்குப் பிறகு FBI பெற்ற மிகப்பெரிய எண்ணிக்கையிலான குறிப்புக்கள் ஆகும்.
இது ஒரு அரசியல் படுகொலை என்று கண்டித்த உட்டா ஆளுநர் ஸ்பென்சர்க் காக்ஸ், இந்த வழக்கில் மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்
இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட சார்லி கிர்க்கின் பின்னால் நின்றிருந்த 2 நபர்கள், துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன் கையால் சைகை காட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாருக்கு இவர்கள் சைகைச் செய்கிறார்கள் ? என்பது தெரியவில்லை. இதே போல் சார்லி கிர் படுகொலை தொடர்பான பல கேள்விகள் பதில் இல்லாமல் உள்ளன.