அமெரிக்காவில் புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டம், இந்திய ஐடி துறையைக் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது என்ன சட்டம்? அதனால் என்ன பாதிப்பு ஏற்படும்?. பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
இந்தியாவில் ஐடி நிறுவனங்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. “அங்களுக்கு என்னப்பா, கை நெறைய சம்பளம், வாரத்துக்கு ரெண்டு நாள் லீவ், வருஷாவருஷம் இன்கிரிமெண்ட், ப்ரமோஷன்…. நாம அப்டியா?” என ஐடி துறையினரைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை.
ஆனால், ஐ.டி. துறையினரின் இந்த மவுசும், அவர்கள் மீதான இந்த வியப்பும் தொடர்ந்து நீடிக்குமா என்பது இனி சந்தேகம்தான். ஏனென்றால், இந்திய ஐடி துறையினரின் வயிற்றில் புளியைக் கரைக்கும் வகையிலான புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா.
அந்தச் சட்டத்தின் பெயர் HIRE act. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து ஐடி சேவையைப் பெறுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் சட்டம் இயற்றப்படவுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தகப் பிரிவு ஆலோசகரான பீட்டர் நவாரோ என்பவர்தான், இந்தச் சட்டத்திற்கு பிள்ளையார்சுழி போட்டதாகக் கூறப்படுகிறது. அவுட்சோர்சிங் முறையில் பெறப்படும் ஐடி சேவைகளுக்கும் வரி விதிக்க வேண்டும் என்ற முத்தான யோசனையை அவர் ட்ரம்பிடம் வழங்கியிருக்கிறார்.
தற்போது அமெரிக்கச் செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சட்டமாக்க ட்ரம்ப் அரசு முயன்று வருகிறது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், எந்தெந்த அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களிடம் இருந்து அவுட்சோர்சிங் முறையில் ஐடி சேவையைப் பெறுகின்றனவோ, அவையெல்லாம் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டி வரும்.
இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் முதல் ஆளாகப் பாதிக்கப்பட போவது, இந்தியாவைச் சேர்ந்த ஐடி நிறுவனங்கள்தான். ஏனெனில், இந்திய ஐடி நிறுவனங்களின் அவுட்சோர்சிங் வருமானத்தில் 60 சதவீதத்திற்கும் மேல் அமெரிக்காவில் இருந்துதான் பெறப்படுகிறது.
அதிக வரி செலுத்தி வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்சிங் பெறுவதைக் காட்டிலும், சொந்த நாட்டு ஊழியர்களைக் கொண்டே வேலையைச் செய்து முடிக்கதான் இனி அமெரிக்க நிறுவனங்கள் விரும்பும். அதனால், இந்திய ஐடி துறையில் பணியாற்றுபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையைத் தவிர்க்க வேண்டும் என்றால், அமெரிக்க நிறுவனங்களுக்குக் குறைந்த கட்டணத்திற்கு இந்திய ஊழியர்கள் சேவை வழங்க வேண்டும். அல்லது ஐடி சார்ந்த பணிகளுக்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் மற்ற நாடுகளிடம் இருந்தும் அவுட்சோர்சிங் பெற வேண்டும் என நிபுணர்கள் ஆலோசனைத் தெரிவிக்கின்றனர்.