திருச்சி மரக்கடைப் பகுதியில் பரப்புரைக்காகத் தவெக தலைவர் விஜய் வந்த போது வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் விதிமீறலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
திருச்சி மரக்கடைப் பகுதியில் தவெகத் தலைவர் விஜய் பரப்புரை நடத்த காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
காலை 10.35 மணிக்குப் பரப்புரைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தொண்டர்களின் கூட்டத்தால் விமான நிலையத்திலிருந்து மரக்கடைப் பகுதிக்கு விஜய் வருவதற்கு 4 மணி நேரம் கடந்தது.
இதனால் கடும் வெயிலில் காத்திருந்த தவெக தொண்டர்கள் குடிநீர் கூட கிடைக்காமல் பரிதவித்தனர். நீண்ட நேரம் காத்திருந்ததால் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
அதேபோல் பரப்புரைக்கு வரும் தொண்டர்களுக்குக் கட்சி தலைமைப் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால் நிபந்தனைகளை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து விஜயின் அறிவுறுத்தல்களை மீறி அவர்ப் பயணித்த சாலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், உயரமான விளம்பரப் பதாகைகள் மீது அத்துமீறி ஏறிய தவெக தொண்டர்களால் பதற்றம் நிலவியது.
அதேபோல் சில இடங்களில் வீடுகளுக்கு மேல் ஏறி நின்ற தவெக தொண்டர்களால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.