வினோதமான கட்டுப்பாடுகளை விதிப்பதில் வடகொரிய அதிபருக்கு ஈடுஇணையே இல்லை. தற்போது அவர் விதித்துள்ள தடை ஒன்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்..
வடகொரியா உலகின் மிகவும் விசித்திரமான நாடு. அங்கே என்ன நடக்கிறது? மக்கள் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்? அதிபர் கிம் ஜாங் உன் எவ்வாறு ஆட்சி நடத்துகிறார்? என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. மிகவும் மர்மமான நாடாகவே பல தசாப்தங்களான வடகொரியா இருந்து வருகிறது.
இந்தச் சூழலில், வடகொரியா குறித்த 14 பக்க அறிக்கை ஒன்றை ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் உன்னின் ஆட்சியின்கீழ் இனி ஒரு நொடி கூட வசிக்க முடியாது என முடிவெடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர்
உயிரைப் பணயம் வைத்து வடகொரியாவில் இருந்து வெளியேறினர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
வடகொரியாவில் எத்தகைய சட்டங்கள், கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறித்து ஐநாவின் இந்த அறிக்கை விளக்குகிறது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு கட்டுப்பாடு பலரரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெளிநாட்டுத் தொலைக்காட்சி தொடர்களைப் பார்க்க கூடாது. அதிலும் குறிப்பாக, தென்கொரிய தொடர்களின் பக்கம் தலைவைத்தே படுக்கக் கூடாது எனக் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை மீறினால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இம்சை அரசன் படத்தில், “புறாவுக்கு எல்லாம் போரா” என ஒரு வசனம் வரும். அதேபோன்ற கேள்வியைதான் உலக மக்கள் தற்போது எழுப்பி வருகின்றனர், “தொலைக்காட்சி தொடர்களைப் பார்ப்பதற்கெல்லாம் மரண தண்டனையா?”..
ஆனால், இத்தகைய வினோதத் தடைகளை கிம் ஜாங் உன் விதிப்பது இதுவொன்றும் முதல்முறையல்ல. ஏற்கனவே இதுபோன்ற பல கட்டுப்பாடுகளை அவர் விதித்துள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள ஆண்களுக்கு எவ்வாறு ஹேர்கட் செய்வது, எந்த ஹேர்ஸ்டைல் வைப்பது என்பதில் எப்போதுமே ஒரு குழப்பம் இருந்து வரும். ஆனால், வடகொரிய ஆண்களுக்கு அத்தகைய குழப்பமே கிடையாது.
எப்படி ஹேர்கட் செய்ய வேண்டும் என்பதை அரசே கூறிவிடும். மேலும், இந்தந்த ஹேர் ஸ்டைல்களைதான் வைக்க வேண்டும் என்பதற்கான ஒரு பட்டியலையும் வடகொரிய அரசு கைவசம் வைத்துள்ளது. ஆண்களும், பெண்களும் அதில் ஒன்றை தேர்வு செய்து ஹேர்கட் செய்துகொள்ளலாம்.
அதேபோல, பெண்கள் அடர் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் போடுவதற்கும் கிம் ஜாங் உன் “நோ” சொல்லியுள்ளார். வடகொரியா என்பது கம்யூனிச நாடு. கம்யூனிசத்தின் வண்ணம் சிவப்பு.
அப்படிப் பார்த்தால், பெண்கள் தாராளமாகச் சிவப்பு நிற லிப் ஸ்டிக்கை போட்டுக்கொள்ளாம்தானே எனக் கேட்கலாம். ஆனால், சிவப்பு நிறத்தை முதலாளித்துவத்தின் நிறமாகவும் வடகொரிய அதிபர் கருதுகிறார்.
உடை விஷயத்திலும் கிம் ஜாங் உன் மிகவும் கண்டிப்பானவர். மேற்கத்திய ஆடைகளை வடகொரிய மக்கள் அணிய கூடாது. அதிலும் ஜீன்ஸ் பேண்ட் அணிவது குறித்து நினைத்துப் பார்க்கவே கூடாது. சரி, சுற்றுலாப் பயணிகளாவது ஜீன்ஸ் பேண்ட் அணிய முடியுமா எனக் கேட்டால், “வாய்ப்பில்ல ராஜா“ என்பதுதான் வடகொரிய அதிகாரிகள் சொல்லும் பதில்.
இப்படி விதவிதமாய், வித்தியாசமாய் பல விஷயங்கள் வடகொரியாவில் தடைச் செய்யப்பட்டுள்ளன. பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்டவற்றையும், அந்தத் தடை செய்யப்பட்ட பட்டியலில் கிம் ஜாங் உன் இணைத்துள்ளார் என்பதுதான் கூடுதல் சிறப்பு.