போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்ட நபரை மத்திய கலால் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆம்பூரை சேர்ந்த ஹபிசூர் ரகுமான் என்ற நபர் ஜிஎஸ்டி வரி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட நபர், போலி ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு நபர்களின் பெயர்களில் ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளதும், இதன்மூலமாகப் போலி வரி விலைப்பட்டியல்களை உருவாக்கிச் சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கைதான அந்நபரை 14 நாட்கள் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்துறை, தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தீவிர விசாரணையின் மூலமாக இந்த விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.