ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக் குலுக்க மறுத்தது ஏன் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
ஆகிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்ட நாள் முதலே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 14-ம் தேதி பலப்பரீட்சை நடத்துவதாக அறிவிக்கப்பட, பெரும் எதிர்பார்ப்புடன் டிக்கெட் ஓப்பனிங்கிற்காக ரசிகர்கள் காத்துக் கிடந்தனர்.
ஏணி வைத்தாலும் இந்திய அணியைத் தொட்டு கூட பார்க்க முடியாது என்ற நிலையில் பாகிஸ்தான் அணி இருப்பதை ரசிகர்கள் அறிந்திருந்தாலும், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இரு அணிகளும் மோதும் போட்டி எப்படி இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் கிளம்பியது.
ஆனால், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதை இந்தியா விரும்புமா என்றெல்லாம் கேள்வி எழ, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ சரியான விளக்கத்தை அளித்தது. பாகிஸ்தான் அணியுடனான இருதரப்பு தொடர்களில் இந்தியா ஒருபோதும் விளையாடாது. ஆனால், ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளதால் ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்தியா, ஈவு இரக்கமின்றி அந்த அணியைப் பந்தாடியது. கேப்டன் சூர்யக் குமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள், பஹல்காம் தாக்குதலில் உயரிழந்தவர்களை மனதில் வைத்து ஆக்ரோஷத்துடன் விளையாட, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களுக்குப் பாகிஸ்தான் அணி சுருண்டது. சொற்ப இலக்கை 15 புள்ளி 5 ஓவர்களிலேயே இந்திய அணி எட்டிவிட, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.
ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியைப் பழிதீர்த்ததோடு மட்டும் இந்திய வீரர்கள் விட்டுவிடவில்லை. போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நடைமுறையாக இருந்து வரும் நிலையில், பாகிஸ்தான் வீரர்களுடன் HAND SHAKE செய்ய மறுத்து தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினர். பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதால் தானே அப்பாவி மக்களை இழந்தோம் என்ற கோபக்கனல் இந்திய வீரர்களின் கண்களில் அப்படியே தெரிந்தது.
இதுகுறித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கேள்வி எழுப்ப, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தே அவ்வாறு நடந்து கொண்டதாகத் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை பொருட்டாகவே கருதக் கூடாது என்ற இந்திய அணியின் செயலுக்குப் பாராட்டுகள் குவிய, அந்த எண்ணத்திற்கு வித்திட்டவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் அப்படியொரு யோசனையை வீரர்களுக்குக் கொடுத்தாராம். களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தைளால் சீண்டினாலும், அதனைத் துட்சமாக நினைத்து விலகுவதே அவர்களுக்கு வழங்கப்படும் சரியான பதிலடி எனக் கௌதம் காம்பீர் தெரிவித்தாராம்.
இந்தச் செய்தி கிரிக்கெட் ரசிகர்களின் காதுக்கு எட்டிவிட ஜென்டில்மேன் விளையாட்டை வைத்தே பாகிஸ்தானுக்குக் குட்டு வைத்த ஜென்டில்மேன் கவுதம் கம்பீர் எனப் புகழ்ந்து வருகின்றனர்.