சீனாவின் சவாலை எதிர்கொள்ளும் விதமாக அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது.
சீனாவின் திபெத் என்ற பகுதியில் உருவாகும் பிரம்மபுத்திரா என்ற நதி அருணாச்சலப்பிரதேசம், அசாம், வங்கதேசம் சென்றடைந்து பின் கடலில் கலக்கிறது.
சீனாவில் சாங்போ நதி என்றழைக்கப்படும் இந்த நதியின் குறுக்கே மிகப்பெரிய அணையைக் கட்டும் பணியைச் சீனா செய்துவந்தது.
இந்த அணையால் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனவும், மழைக் காலங்களில் அருணாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடும் எனவும் சீனாவிடம், இந்தியா தெரிவித்தது.
இதனைச் சற்றும் கண்டுகொள்ளாத சீனா, அணையைக் கட்டும் பணியைத் தொடர்ந்து செய்துவந்தது.
இதற்கிடையே பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட அணைக் கட்டும் பணி அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் துணை நதியின் குறுக்கே தொடங்கி உள்ளது.
தேசிய நீர்மின் கழகம் தொடங்கி உள்ள இந்த அணை 912 அடி உயரத்திலும், ஆண்டுக்கு 11 ஆயிரத்து 223 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையிலும் அமைய உள்ளது.
மத்திய அரசு கையில் எடுத்துள்ள இந்த அணை 17 ஆயிரத்து 69 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட வேண்டும் என டெண்டர் விடப்பட்டுள்ளது.