சென்னை அம்பத்தூர் அருகே மாமூல் தர மறுத்த மளிகைக்கடை உரிமையாளர், அவரது கர்ப்பிணி மனைவியை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடி கலைவாணர் நகர் பகுதியில் வேல்முருகன் என்பவர்க் கடந்த ஓராண்டாக மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்குச் செல்லவிருந்தார். அப்போது கஞ்சா போதையில் அங்கு வந்த 7 பேர், கடையைத் தொடர்ந்து நடத்திட மாதம் 5 ஆயிரம் ரூபாய் மாமூல் தரவேண்டுமெனக் கூறி மிரட்டி உள்ளனர்.
வேல்முருகன் அதற்கு மறுத்ததால், அவரை அந்தக் கும்பல் கத்தியால் வெட்டியது. தடுக்க முயன்ற அவரது 8 மாத கர்ப்பிணி மனைவியையும் கஞ்சா போதையில் இருந்த அந்தக் கும்பல் கத்தியால் தாக்கியுள்ளது.
பின்னர் கடையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பினர். இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பான புகாரை அடுத்து தலைமறைவாக உள்ள 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.