டிண்டர் செயலி மூலம் உலகம் முழுவதுமுள்ள பல பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து, கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய நபர் பல ஆண்டு தேடுதல் வேட்டைக்குப் பின் ஜார்ஜியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
சைமன் லெவிவ் என அறியப்படும் ஷிமோன் யெஹூதா ஹயூத் என்ற இந்த நபர், உலகம் முழுவதும் உள்ள பல பெண்களை தனது காதல் வலையில் சிக்கவைத்து, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் என்றால் நம்ப முடிகிறதா? இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 34 வயதான ஷிமோன் யெஹூதா ஹயூத், தனது பெயரை சைமன் லெவிவ் என மாற்றிப் பிரபல வைர வியாபாரியான லெவ் லெவியேவின் மகன் என்ற போலி அடையாளத்துடன் நாடு நாடாகச் சுற்றி வந்துள்ளார்.
தன்னைப் பெரும் பணக்காரர்போல் காட்டிக்கொண்ட இவர், டிண்டர் செயலி மூலம் பணம் படைத்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை குறிவைத்துள்ளார். அவர்களை தனது காதல் வலையில் சிக்க வைத்து ஏமாற்றிக் கோடிகளில் பணம் பறிப்பதை ஹயூத் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். இப்படி இவர் மோசடி செய்து சுருட்டிய பணத்தின் மதிப்பு மட்டும் ஏறக்குறைய 10 மில்லியன் டாலருக்கு மேல் என்கின்றனர் இண்டர்போல் அதிகாரிகள்.
பல நாட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த இவரை கைது செய்ய இண்டர்போல் அதிகாரிகளும் வலை விரித்தனர். அதன் ஒரு பகுதியாகச் சர்வதேச விமான நிலையங்களில் சைமன் லெவிவ் என்ற ஷிமோன் யெஹூதா ஹயூத் மீது RED NOTICE அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த ஹயூதை ஜார்ஜியாவின் பாட்டுமி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து போலீசார்க் கைது செய்துள்ளனர். அவர் பிடிபட்டதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
இளமை பருவம் முதலே கையொப்ப மோசடி, காசோலை மோசடி போன்றவற்றில் ஈடுபட்டு வந்த ஹயூத், பின்னர்ச் சைமன் லெவிவ் என்ற போலி அடையாளத்தை ஏற்று, பிரபல வைர வியாபாரியான லெவ் லெவிவின் மகனாக நடித்துப் பெண்களை ஏமாற்ற தொடங்கினார்.
2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல பெண்களை தனி ஜெட் விமானம், ஆடம்பர விருந்து, பாதுகாவலர்களுடன் கூடிய வாழ்க்கை முறைப் போன்றவற்றால் கவர்ந்தார் ஹயூத். அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின், தன்னை எதிரிகள் தாக்க முற்படுவதாகவும், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாகவும் நாடகங்களை அரங்கேற்றிய ஹயூத், அந்தப் பெண்களின் மூலம் வங்கிகளில் லோன்களைப் பெற்று கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார்.
2019-ல் போலி பாஸ்போர்ட்டுடன் கிரீஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட ஹயூத் சொந்த நாடான இஸ்ரேலுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு 15 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதும், கொரோனா தொற்று பரவல் காரணமாக வெறும் ஐந்தே மாதங்களில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, கடந்த 2022-ம் ஆண்டு NETFLIX தளத்தில் வெளிவந்த THE TINDER SWINDLER என்ற ஆவணப்படம், ஹயூத்தின் காதல் மோசடிகளை உலகம் முழுவதும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அதன் பின்னரே ஹயூத் டிண்டர் பயன்பாட்டிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டார்.
தற்போது ஜார்ஜியாவில் ஹயூத் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது எந்த நாட்டின் கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த காலங்களில் உலகம் முழுவதும் காதல் மோசடிக்குப் பெயர்போன TINDER SWINDLER, மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளது பல நாடுகளில் பேசுபொருளாகியுள்ளது.