கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை நாய் கடித்ததில் அவரது கை விரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஒப்லியப்பா என்பவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டு, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த தெருநாய் ஒன்று கடித்ததில் அவரது இடது கை நடுவிரல் துண்டானது. பின்னர் துண்டான விரலையும் தெருநாய் தூக்கி சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒப்லியப்பா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தால் அச்சமடைந்துள்ள அப்பகுதி குடியிருப்புவாசிகள், தெருநாய்களைப் பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.