கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூளகிரி அடுத்த சொங்கோட சிங்கனள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருந்தார்.
இவர் குமார் என்பவரின் கோழிப்பண்ணையை வாடகைக்கு எடுத்து வெள்ளை பன்றிகள் வளர்த்து வந்துள்ளார்.
இதில் சிங்காரப்பேட்டைச் சேர்ந்த ஆதி மற்றும் ரசித் ஆகியோர் பங்குதாரர்களாக இணைந்திருந்த நிலையில் இவர்களுக்குள் கடந்த இரண்டு மாதங்களாகப் பிரச்னை இருந்துள்ளது.
இந்நிலையில் ஆதி மற்றும் ரசித் இருவரும் ரவிசங்கரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
தொடர்ந்து இருவரும் சூளகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். ரவிசங்கரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி தமிழக வாழ்வுமை கட்சியினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.