கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், கொடி கம்பங்கள் அமைப்பது குறித்த வழிகாட்டு விதிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அரசு நிகழ்ச்சிக்காகக் கொடி கம்பங்கள் அமைக்கும்போது சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் பகுதிகளில் அமைக்கக் கூடாது, 3 நாட்களில் அவற்றை அகற்றிவிட வேண்டும் போன்ற விதிமுறைகள் இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி இளந்திரையன், கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.