பிரிட்டன் அரச குடும்ப நெறிமுறைகளை மீறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார். அப்போது அவருக்கு பிரிட்டனின் மன்னரான மூன்றாம் சார்லஸ் உற்சாக வரவேற்பு அளித்தார். அரச விவகாரங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதியில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோரை மன்னர் மூன்றாம் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.
பின்னர் வின்சோர் கோட்டைப் பகுதியில் ராஜ ஊர்வலம் முடிவடைந்த பின்னர், அரசு அணிவகுப்பை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது மன்னர் சார்லஸை கடந்து சில அடிகள் முன்னதாக அதிபர் டிரம்ப் நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வெளியானது.
பிரிட்டன் மன்னருக்கு முன் அவரது விருந்தினர் ஒருவர் நடந்து செல்வது அந்நாட்டு அரச குடும்ப நெறிமுறைகளை மீறும் செயல் என கூறப்படும் நிலையில், டிரம்ப் அவ்வாறு நடந்து சென்றது அவமரியாதையான ஒன்று என இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.