திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும் , துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணையையும் வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிளுக்கு மாற்றி, வருமான வரித் துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து திமுக அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை மத்திய சர்கிளுக்கு மாற்றிப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறைத் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது,மனுவுக்குப் பதிலளிக்கும்படி திமுக அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
அதுவரைத் திமுக அறக்கட்டளைத் தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.