பிரான்ஸ் அதிபரின் மனைவி ஒரு திருநங்கை எனத் தொடர்ச்சியாக விமர்சனம் எழுந்து வருகிறது. இதனை சட்டரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் எதிர்கொள்ள அதிபர் மேக்ரான் தயாராகியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
காதலுக்கு வயது வித்தியாசமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என நிரூபித்தவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். தன்னை விட 24 வயது மூத்த பெண்ணைத்தான் அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
1993ம் ஆண்டு பிரான்ஸின் அமியன்ஸ் பகுதியில் உள்ள தனியார் கத்தோலிக்க பள்ளியில்தான் மேக்ரானும், அவரது மனைவியான பிரிஜிட்டேவும் முதல்முறையாகச் சந்தித்துக்கொண்டனர். அப்போது மேக்ரானுக்கு வெறும் 15 வயதுதான். ஆனால், பிரிஜிட்டேவுக்கோ 39 வயதாகியிருந்தது.
மேலும், பிரிஜிட்டேவுக்கு அப்போது ஆன்றே-லூயிஸ் ஆசிரே என்பவருடன் திருமணம் நடைபெற்று, 3 குழந்தைகளும் இருந்தனர். அவரது முதல் குழந்தையின் பள்ளி தோழன்தான் இம்மானுவேல் மேக்ரான்.
இருவரும் காதல்வயப்பட்டனர். இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிரிஜிட்டே-வின் கணவர் 2007ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட்டார். அதே ஆண்டு, பிரிஜிட்டேவை மேக்ரான் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்னருமேகூட இருவரையும் பலர் விமர்சித்தவண்ணம்தான் இருந்தனர். இருப்பினும் அந்த விமர்சனங்களையெல்லாம் காதில் வாங்காமல் மேக்ரானும், பிரிஜிட்டேவும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்தச் சூழலில்தான், பிரிஜிட்டே ஒரு பெண்ணே இல்லை. அவர் ஒரு திருநங்கை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான கேண்டஸ் ஓவன்ஸ் என்பவர்தான் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிரிஜிட்டே பிறக்கும்போது ஒரு ஆணாகப் பிறந்ததாகவும், அவருக்கு ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ்( Jean-Michel Trogneux) எனப் பெயரிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். பின்னர், பிரிஜிட்டே பெண்ணாக மாறி மேக்ரானைத் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.
இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரான், வதந்திகளைப் பரப்புவதாக கூறி கேண்டஸ் ஓவன்ஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இருப்பினும், பிரிஜிட்டே உண்மையில் ஒரு பெண்தானா என, பிரான்ஸ் மக்களும் சந்தேகிக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, பிரிஜிட்டே திருநங்கை இல்லை என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மேக்ரான் உள்ளார்.
இதுகுறித்த பேட்டியளித்த அவரது தரப்பு வழக்கறிஞர், மேக்ரான் மிகவும் மனஉளைச்சலில் இருப்பதாகவும், இத்தகைய குற்றச்சாட்டுகள் அவரது பணியைப் பாதிப்பதாக உள்ளதாகவும் கூறினார். பிரிஜிட்டே கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளதா? எனச் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், அந்தப் புகைப்படங்கள் உள்ளதாகவும், அவை நீதிமன்றத்திடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இருப்பினும் தனது கூற்றில் கேண்டஸ் ஓவன்ஸ் உறுதியாக உள்ளார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகு யார் கூறுவது உண்மை என்பது தெரிய வரும்.