உடல் நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர், உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கரின் உடலுக்குத் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். கமல்ஹாசன், ஜி.கே.வாசன், சீமான், சத்யராஜ், உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் நடிகர் தனுஷ், சிவகார்த்திகேயன், பாக்யராஜ், எம்.எஸ்.பாஸ்கர், மோகன் ஜி உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்வதற்காகப் பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ரோபோ சங்கரின் உடலுக்குக் குடும்பத்தினர் நடனமாடி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மின் மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, பின் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.