ஐ.நா சபையில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் காசாவில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், 56 ஆயிரத்து 378 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை இஸ்ரேலுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் ஐ.நா. பொது சபையின் ஆண்டு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், காசா விவகாரம் பற்றி உயர்மட்ட கூட்டமும் இடம்பெறுகிறது. இதில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசை பங்கேற்க விடாமல் தடுக்க அவரது விசாவை அமெரிக்கா ரத்து செய்தது.
இதனால் அவர் ஐ.நா சபையில் காணொலி மூலம் உரையாற்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா எதிர்த்த நிலையில் இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது. இதன்மூலம் 145 நாடுகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்டது.